விளையாட்டு

ஐபிஎல் இறுதிப் போட்டி: 2 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

ஐபிஎல் இறுதிப் போட்டி: 2 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

webteam

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

12-வது ஐபிஎல் தொடர் இப்போது நடந்து வருகிறது. 8 அணிகள் மோதிய இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் டாப் 4 இடங்களுக்கு முன்னேறிய அணிகளுக்கான பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் இப்போது நடந்து வருகிறது. மும்பை- சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் சென்றது.

அதில் தோற்ற சென்னை அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. விசாகப் பட்டினத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. தோல்வியடைந் த ஐதராபாத் அணி வெளியேறியது. இதையடுத்து டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்குச் செல்லும். இறுதிப் போட்டியில் மும்பையை எதிர்த்து அந்த அணி மோதும்.

இறுதிப் போட்டி, ஐதராபாத், ராஜிவ் காந்தி மைதானத்தில் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதில் பத்து சதவிகித டிக்கெட் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்பட்டு விடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பத்தாயிரம் டிக்கெட்டுகளை வைத்துக்கொள்ளும். மீதமுள்ள டிக்கெட்டுகள் விற்பனைக்குச் செல்லும். அதன்படி விற்கப்பட்ட 
இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள், இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளன. 

இந்த டிக்கெட் விற்பனையை, இவன்ட்ஸ் நவ் என்ற நிறுவனம் நடத்தியது. ரூ.1,500-ல் இருந்து ரூ.5000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந் தன. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆன்லைனில் விற்பனைத் தொடங்கியது. தொடங்கிய 2 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.