பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 206 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11-வது ஐபிஎல் தொடர் நாடு முழுவதும் பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். எனவே ஒவ்வொரு அணியும் தனது பலத்தை காட்ட கடுமையாக போராடி வருகின்றன.
இன்று நடைபெற்று வரும் 24லீக் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்த்து களமிறங்கியுள்ளது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது. பெங்களூருவில் நடைபெறும் போட்டி என்பதால் உள்ளூர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீ காக் மற்றும் விராட் கோலி களமிறங்கினார்.
டீ காக் ஒருபுறம் சிறப்பாக விளையாடினாலும் விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டீ காக்குடன் ஏபி டிவில்லியர்ஸ் இணைந்தார். தொடக்கத்தில் இருந்த அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ் சென்னை அணியின் பந்துவீச்சுகளை நாலாபுறமும் பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் சற்று கலக்கம் அடைந்தார். மறுபுறத்தில் டீ காக்கும் சிறப்பாக விளையாடினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் 103 ஆக இருந்தபோது டீ காக் ஆட்டமிழந்தார். 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தபோது பிராவோ பந்தில் கேட்ச் கொடுத்து டீ காக் அவுட்டானார். இதனையடுத்து சிக்சர் மழை பொழிந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸூம் அவுட்டானர். 30 பந்துகளில் 8 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த டி வில்லியர்ஸ் இம்ரான் தாகிர் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் வெறும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மந்தீப் சிங் 32 ரன்களும், கிராண்ட்ஹோம் 11 ரன்களும் எடுத்த நிலையில் அதன்பின் களமிறங்கிய நேகி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தமிழக வீரரரான வாஷிங்டன் சுந்தர் 1 சிக்சர் 1 பவுண்டரியுடன் 4 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.