விளையாட்டு

ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம்! ஒரு போட்டியை ஒளிபரப்ப ரூ.100 கோடி வரை வழங்க முன்வந்த நிறுவனங்கள்

ச. முத்துகிருஷ்ணன்

ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்பு ஏலத் தொகை 43 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளது.

உலகின் முன்னணி விளையாட்டு தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் கிரிக்கெட் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அப்போட்டிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி, ஓடிடி, டிஜிட்டல் உள்ளிட்ட தளங்களில் ஒளிபரப்புவதற்கான உரிமையை விற்பதற்கான ஏலம் தொடங்கியுள்ளது.

மின்னணு முறையில் நடக்கும் இந்த ஏலத்தில் வயாகாம், டிஸ்னி ஹாட்ஸ்டார், கல்வர் மேக்ஸ் என்டர்டெயின்மென்ட், ஜீ குழுமம், டைம்ஸ் இன்டர்நெட், ஃபன் ஏஷியா, ரிலையன்ஸ் ஜியோ ஆகிய 7 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், அடிப்படை ஏலக் கட்டணமாக 32 ஆயிரத்து 890 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நிறுவனங்கள் போட்டிபோட்டு ஏலம் கேட்டதால் தொகை முதல் நாளில் 43 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் படி ஒரு போட்டியை ஒளிபரப்ப 100 கோடி ரூபாய் வரை வழங்க நிறுவனங்கள் முன்வந்துள்ளது தெரியவந்துள்ளது. முதல் நாளில் ஏலம் எடுக்க கடும் இழுபறி நீடித்ததால் இன்றும் ஏலம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.