விளையாட்டு

“டி20 உலகக் கோப்பையில், தமிழக டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டை மிஸ் செய்துவிட்டோம்” - ரவிசாஸ்திரி

rajakannan

தமிழக வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான நடராஜனின் மிகச் சிறப்பான பங்களிப்பை, கடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இழந்துவிட்டது என்று முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்க வீரராக உள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜன். மிக குறுகிய காலத்தில், தன்னுடைய திறமையின் மூலம் இந்த இடத்திற்கு வந்தவர் அவர். ஐபிஎல் டி20 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்த நடராஜன், தன்னுடைய சிறப்பான யார்க்கர் பந்துவீச்சு மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, அதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தடம் பதித்தார்.

குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜன், டி20 இந்திய அணியில் இடம்பிடித்த மற்றொரு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலக, அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து எதிர்பாராத விதமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய பவர் ப்ளேயில் கிங் என்று நிரூபித்தார் நடராஜன். பின்னர், அதே தொடரில் ஒருநாள் தொடரில் நவ்தீப் சைனி காயம் காரணமாக விலக 3-வது ஒருநாள் போட்டியில், நடராஜன் முத்திரை பதித்தார்.

மிக விரைவில் முன்னணி பந்துவீச்சாளர் என்ற நிலைக்கு சென்றநிலையில், முழங்கால் மற்றும் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அசத்தல் பந்துவீச்சை தொடர்கிறார் யார்க்கர் கிங் நடராஜன். இந்நிலையில், நடராஜன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதில், “காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவரது வரவை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகக் கோப்பையில் நடராஜனின் பங்களிப்பை நாம் தவறவிட்டு விட்டோம். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவரால் உலகக் கோப்பையில் விளையாட முடியாமல் போய்விட்டது. டெத் ஓவரில் சிறப்பாக பந்துவீசுகிறார். யார்க்கர்களை துல்லியமாக வீசுகிறார். பந்துவீச்சை தனது கட்டுக்கோப்பில் வைத்துள்ளார். பேட்ஸ்மேன்கள் கணிப்பதற்குள்ளேயே அவரது பந்து பேட்டில் பட்டுவிடும்.

ஒவ்வொரு முறையும் அவரை, நான் தேர்வு செய்யும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அவரது முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது” என்று நினைவுகளையும் சேர்த்து பகிர்ந்துள்ளார். தமிழக வீரரான நடராஜன், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆஸ்திரேலிய தொடரின் போது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தது குறிப்பிடத்தக்கது.