விளையாட்டு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து பிருத்வி ஷா விலகல் - ஷேன் வாட்சன் தகவல்

JustinDurai

டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான பிரித்வி ஷா காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மே 1 அன்று கடைசியாக லக்னோவுக்கு எதிராக பிரித்வி ஷா விளையாடினார்  அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை. இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் பிருத்வி ஷாவுக்கு டைபாயிடோ அல்லது வேறு ஏதோவொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் வாட்சன் மேலும் கூறுகையில், ''பிருத்வி ஷா என்ன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு இரண்டு வாரங்களாக காய்ச்சல் இருந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறார். பிருத்வி ஷா ஒரு திறமையான இளம் வீரர். உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை அவர் துவம்சம் செய்தார். அவர் இல்லாதது எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. பிருத்வி ஷா விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் எங்களின் கடைசி இரு ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என்பதுபோல் தெரிகிறது'' என்று கூறியுள்ளார்.  

நடப்பு தொடரில் டெல்லி அணிக்காக பிருத்வி ஷா விளையாடிய 9 ஆட்டங்களில் இரு அரைசதங்கள் உட்பட 259 ரன்கள் எடுத்துள்ளார்.

 இதையும் படிக்கலாம்: 'பிளே ஆஃப்' வாய்ப்பை உறுதி செய்யுமா பெங்களூர்? - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்