பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் தற்போது ஏறக்குறைய முதல் சுற்று சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கொரோனா காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, நவி மும்பை, புனே ஆகிய மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 31 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
எனினும், டெல்லி அணியில், அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது, ரசிகர்கள் மற்றும் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பஞ்சாப் அணியுடன் விளையாடவிருந்த நிலையில், டெல்லி அணியில் இன்று மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கடந்த 15-ம் தேதி பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி, புனே செல்லவிருந்தநிலையில், மிட்சல் மார்ஷ்-க்கு பாசிட்டிவ் என வந்தது. அவருடன், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஊழியர்கள் சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் புனே எம்சிஏ மைதானத்தில் இருந்து போட்டி, மும்பை புரோபோர்ன் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இன்று காலை டிம் சீஃபர்ட்டுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வுசெய்துள்ளார்.
இதையடுத்து மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்:
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், சர்ஃப்ராஸ் கான், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்