விளையாட்டு

கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் ! எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம்..?

கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் ! எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம்..?

jagadeesh

அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும்‌ டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்‌, ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எவ்வளவு தொகையை பயன்படுத்த முடியும் என்பதை விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் ஆண்டுதோறும் பெங்களூருவில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஏலமானது முதல் முறையாக ‌பெங்களூருவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டது‌. இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடத்தப்படுமெ‌ன அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டத்தின் முடிவில்‌, இந்த ஏலத் தேதியானது இறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரர்களின் ஏலத்திற்காக அணிகள் இந்த முறை 85 கோடி ரூபாய் வரை செலவிடலாம் என ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ள வீரர்களின் ஊதியத் தொகையை தவிர்த்து உள்ள கையிருப்புத் தொகையிலேயே புதிய வீரர்களை ஏலம் எடுக்க இயலும். அந்த வகையில் டெல்லி அணி அதிகப்பட்சமாக 8.2 கோடி ரூபாயை இருப்பில் கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.15 கோடி ரூபாயை கையிருப்பில் வைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, கொல்‌கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6.5 கோடியை ஏலத்தில் பயன்படுத்தவுள்ளது. சன்‌ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5.30 கோடியை இருப்பாக பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 3.7 கோடியையும், மும்பை அணி 3.55 கோடியையும், சென்னை அணி 3.2 கோடியையும் கையிருப்பாக கொண்டுள்ளன. குறைந்தபட்சமாக, பெங்களூரு அணி 1.8 கோடி ரூபாயை மட்டுமே கையில் வைத்துள்ளது.

தற்போதைய அணிகளில் இடம்பெறாத பல முன்னணி வீரர்கள் ஏலத்தில் பெரும் தொகைக்கு வாங்கப்படலாம் என நம்‌பப்படுகிறது. இங்கிலாந்து அணிக் கேப்டன் இயான் மார்கன், வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ‌ஸ்டார்க் உள்ளிட்டோரை ஏலத்தில் எடுக்‌க அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகி‌றது.‌