ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் அவ்வணிகளின் பலம், பலவீனங்கள் குறித்து பார்க்கலாம்.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் முனைப்பில் ராகுல் தலைமயிலான பஞ்சாப் அணியும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் ஆயத்தமாகி வருகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 14 ஆட்டங்களிலும், டெல்லி அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பந்துவீச்சில் பலம் சேர்க்கும் ஷமி, காட்டேரல் கூட்டணி ஐபிஎல் கோப்பையை இதுவரை ஒருமுறைகூட பஞ்சாப் கோப்பையை கைப்பற்ற வில்லை. தொடரின் ஆரம்பப்போட்டிகளில் அசத்தினாலும், பிற்பாதியில் சொதப்பலான ஆட்டங்களை வெளிப்படுத்துகின்றன. இது தான் டெல்லி,பஞ்சாப் அணிகளின் ஐபிஎல் வரலாறு. கோப்பை தாகத்தை தீர்த்துக் கொள்ளும் முனைப்பில் இரு அணிகளும் நடப்பாண்டு சீசனை எதிர்நோக்கியுள்ளன.
டெல்லி அணியைப் பொறுத்தவரையில்,முன்னணி வீரர்கள் பலரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளது. ஷிகர் தவன், அஜிங்யா ரஹானே ஆகியோர் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியை அனுபவத்தால் அலங்கரிக்கவுள்ளனர். இளங்கன்றுகள் பிரித்திவ் ஷா மற்றும் ரிசாப் பந்த் அணியின் தூணாகவே பார்க்கப்படுகின்றனர். வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஹெட்மெய்ர், அலெக்ஸ் கேரி ஆகியோர் அணிக்கு பெரும்பலமாக பார்க்கப்படுகின்றனர்.
ஆல்ரவுண்டர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஷர் படேல் நம்பிக்கையளிக்கின்றனர். சுழற்பந்துவீச்சிற்கு சந்தீப் லாமிச்சனே மற்றும் அமித் மிஸ்ரா எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் அனுபவ வீரர் இஷாந்த் சர்மாவுடன், தென்னாப்ரிக்க வேகப்புயல் ரபடா, மோஹித் சர்மா, ஹர்ஷால் படேல் பலம் சேர்க்கின்றனர்.
புதிய கேப்டன் கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்குகிறது பஞ்சாப் படை. "யுனிவர்ஸ் பாஸ்" கிறிஸ் கேய்ல், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வால் ஆகியோரை மேல்வரிசையில் பெரும்பலமாக வைத்துள்ளது அந்த அணி. மத்திய வரிசையில் அதிரடி அசுரன் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் ஜோர்டன், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். வேகப்பந்துவீச்சில் முகமது ஷமியுடன், "சல்யூட் ஸ்பெஷல்" ஷெல்டான் காட்டெரெல் நம்பிக்கை நட்சத்திரங்களாக பார்க்கபடுகின்றனர். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நட்சத்திரங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ள டெல்லி அணியும், புதிய கேப்டனின் வழிநடத்தலில் பஞ்சாப் அணியும் தங்கள் கோப்பை வெல்லும் தாகத்தை தீர்த்துக் கொள்ள முதல் போட்டியில் இருந்தே முனைப்பு காட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.