விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் சம்பளப் பட்டியல் வெளியீடு..!

மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் சம்பளப் பட்டியல் வெளியீடு..!

webteam

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற சாம்பியன்ஸ் என்ற பெருமைக்கு சொந்தமான அணி மும்பை இந்தியன்ஸ். இந்த அணிக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் அந்த அணி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது, அதன் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டதுதான். சச்சின் தலைமையில் விளையாடும் அணி என்பதால், அவரது ரசிகர்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் மும்பை அணிக்கு ஆதரவு தந்தனர். அந்த ஆதரவே தற்போது வரையிலும் மும்பை அணிக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது கூடுதலாக ரோகித் சர்மாவின் ரசிகர்களும் இணைந்து கொண்டனர்.

2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலும் நடந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றிருக்கிறது. ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி இதுவே ஆகும். கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமாக வென்றது.

இதனால் 2020ஆம் ஆண்டுக்கான அணியை மேலும் வலுவுடன் கட்டமைக்க வேண்டும் என நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில், 6 வீரர்களை மும்பை அணி வாங்கியுள்ளது. இதில் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட நாதன் கவுல்டர் மற்றும் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட 2 கிரிஸ் லின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட மூன்று பேர் வர்த்தகம் செய்யப்பட்டனர். இதுதவிர ஏற்கனவே மும்பை அணியில் விளையாடி வரும் வீரர்களில் பலர் மீண்டும் அணிக்காக மறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அனைத்து வீரர்களின் சம்பளத்திற்கான முழுவிவரப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மும்பை அணியில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக முதலிடத்தில் கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளார். அவருக்கு 2020 ஐபிஎல் தொடருக்காக ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரூ.11 கோடியில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து, குருனல் பாண்ட்யாவுக்கு ரூ.8.80 கோடி, நாதன் கவுல்டர் நைல்-க்கு ரூ.8 கோடி, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ரூ.7 கோடி, இஷான் கிஷனிற்கு ரூ.6.20 கோடி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொலார்ட்டுக்கு ரூ.5.40 கோடி சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இவர்கள் தவிர ட்ரெண்ட் போல்ட்டுக்கு ரூ.3.20 கோடி, சூர்யகுமார் யாதவிற்கும் ரூ.3.20 கோடி, குயிண்டன் டி காக்கிற்கு ரூ.2.80 கோடி, மலிங்கா, கிரிஸ் லின் மற்றும் ரூத்ஃபோர்டுக்கு தலா ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்படவுள்ளது. மேலும், ராகுல் சாஹருக்கு ரூ.1.90 கோடி சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது.