விளையாட்டு

2019 ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு

2019 ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு

webteam

2019ம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் முழுவதும் வழக்கம் போல் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்தத் தொடருக்கான வீரர்கள், ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது. 

அதன்படி இந்தாண்டுக்கான போட்டிகள் வரும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்க உள்ளது. ஆனால் அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதே வேளையில் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. 

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ‌

2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றபோது ஐ.பி.எல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.