நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி சென்னை அணியின் இம்ரான் தஹிர் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பந்துவீசிய சென்னை அணியில் இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட் சாய்த்தார். சிறப்பாக விளையாடி வந்த சூர்ய குமார், இஷான் கிஷன் இருவர் விக்கெட்டையும் அவர் சாய்த்தார்.
இந்த இரண்டு விக்கெட் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தாஹிர் 26 விக்கெட் சாய்த்துள்ளார். இதன், மூலம் 25 விக்கெட் சாய்த்து இதுவரை முதலிடத்தில் இருந்த டெல்லி அணியின் ரபாடாவை அவர் பின்னுக்கு தள்ளினார். 17 போட்டி விளையாடி தஹிர் 26 விக்கெட் எடுத்துள்ளார். ஆனால், ரபாடா 12 லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி 25 விக்கெட் சாய்த்தார். உலகக் கோப்பை தொடருக்கு தயாராக வேண்டும் என்பதால் தென்னாப்பிரிக்க அணி அவரை அழைத்துக் கொண்டது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வெற்றிக்கு இம்ரான் தாஹிர் மிகவும் பக்க பலமாக இருந்து வந்துள்ளார். ஒவ்வொரு முறை விக்கெட் எடுக்கும் போதும் மைதானத்திற்குள் ‘ஓடினேன்..ஓடினேன் எல்லைக்கே’ ஓடினேன் எனும் அளவிற்கு ஓடுவார்.