விளையாட்டு

சாம்சன் சதத்தால் ராஜஸ்தான் 198 ரன் குவிப்பு - வெற்றியை நோக்கி ஹைதராபாத்

சாம்சன் சதத்தால் ராஜஸ்தான் 198 ரன் குவிப்பு - வெற்றியை நோக்கி ஹைதராபாத்

webteam

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 198 ரன்கள் குவித்துள்ளது.

2019 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடக்கும் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஹைதராபாத் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். பட்லர் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சற்று தடுமாறி வந்தார். இவர் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ரஷித் கான் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர், சஞ்சு சாம்சன் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார்.

சாம்சன் அதிரடியாக விளையாட, ரஹானே நிதானமாக விளையாடி ரன் அடித்தார். பின்னர், இருவரும் அதிரடி காட்டினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து 122 ரன்கள் சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரஹானே அரைசதம் கடந்தார். சிறப்பாக விளையாடி வந்த ரஹானே மூன்று சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

மறுபுறம் தனது சிறப்பான ஆட்டத்தை சஞ்சு சாம்சன் தொடர்ந்து வந்தார். குறிப்பாக புவனேஷ்வர் குமார் வீசிய 18ஆவது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசினார். இறுதியில் சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 4 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 55 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் ஸ்டொர்க்ஸ் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. ஹைதரபாத் அணி சார்பில் ரசித் மற்றும் நதீம் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

199 ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான வார்னர், பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். அவர் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான பெயிர்ஸ்டோ, தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விளாசி அதிரடி காட்டினார். இந்த இருவரின் அதிரடியாக ஹைதராபாத் அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடிய வார்னர் 37 பந்துகளில் 69 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, ஹைதராபாத் அணி 12.3  ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.