விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்யுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்?

முதல் வெற்றியை பதிவு செய்யுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்?

webteam

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வுசெய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. பெங்களுர் அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பிறகு இரண்டாவது போட்டியில் அபாரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. 

பெங்களுர் அணியில் டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்தப் போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஆனால் இந்த அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களான ஹெர்ட்மேயர், மோயின் அலி மற்றும் காலின் டி க்ரண்ட்ஹோம் ஆகியோர் சொதப்பி வருகின்றனர். அத்துடன் பந்துவீச்சில் சஹால் மட்டும்தான் நன்றாக செயல்பட்டு வருகிறார். மற்ற வீரர்கள் பந்துவீச்சில் சரியாக சோபிக்கவில்லை. எனவே இந்தப் போட்டியில் பந்துவீச்சில் பெங்களுர் அணி அதிக கவனம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் இரண்டாவது போட்டியில் அசத்தலாக விளையாடியது. அந்த அணியில் வார்னர் மற்றும் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடினர். அதேபோல பாரிஸ்டோ அசத்தலாக விளையாடி வருகிறார். அத்துடன் பந்துவீச்சில் ரஷித் கான் நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனால் ஹைதராபாத் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் சற்று தடுமாறிவருவது ஹைதராபாத் அணிக்கு கொஞ்சம் கவலை தரும் விஷயமாக உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களுர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணம் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. எனவே இவருக்கு பதில் புவனேஷ்வர் குமார் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அதேபோல பெங்களுர் அணியில் பர்மன் சேய்னிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுவரை இந்த இரு அணிகளும் 13 முறை ஐபில் போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் ஹைதராபாத் 7 முறையும் பெங்களுர் அணி 5 முறையும் வென்றுள்ளன. ஹைதராபாத் மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் 5 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும் ஒரு போட்டியில் பெங்களுர் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.