ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 53 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெங்களூர் அணியை பொருத்தவரை இந்த ஐபிஎல் தொடர் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துவிட்டது. முதல் 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர், ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றிபெற்று நம்பிக்கை அளித்தது. இருப்பினும், கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டியில் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றியும், 8இல் தோல்வியும் அடைந்துள்ளது.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியை இன்று விளையாடுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் ஸ்டோனிஸ்க்கு பதிலாக கிராண்ட்ஹோம், பவன் நெஹிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், க்லாசென்க்கு பதிலாக ஹெட்மயர் களமிறங்குகின்றனர். ஹைதராபாத் அணியில் அபிஷேக்கிற்கு பதில் யூசப் பதான் களமிறங்குகிறார்.
முன்னதாக, இன்று நடைபெறும் கடைசிப் போட்டியை முன்னிட்டு விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் பேசிய வீடியோ ஒன்றினை ஆர்சிபி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், விராட், ஏபிடி இருவரும் பெங்களூர் ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இதுவரை கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அவர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டனர். ரசிகர்களை ஏமாற்றியதற்காக வருத்தம் தெரிவிக்கும் தொனியில் அவர்களது பேச்சு இருந்தது குறிப்பிடத்தக்கது.