டி காக், ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை இண்டியன்ஸ் 187 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. மும்பை அணியில் கடந்தப் போட்டியில் ஓய்வு பெற்றிருந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பினார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித், டி காக் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து தந்தது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி, 4.2 ஓவர்களிலே 50 ரன்களை எட்டியது. ரோகித் சர்மா 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
டி காக் ஒரு புறம் சிறப்பாக விளையாடினாலும் சூர்ய குமார் யாதவ் 16(10), பொல்லாடு 6, இஷான் கிஷான் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டி காக் 52 பந்தில் 81 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மூன்று சிக்ஸர் விளாசினார்.
இறுதியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. பாண்ட்யா 11 பந்துகளில் 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் சாய்த்தார்.