விளையாட்டு

சிக்சர் மழை பொழிந்த ரஸல் : 232 ரன்களை குவித்த கொல்கத்தா

சிக்சர் மழை பொழிந்த ரஸல் : 232 ரன்களை குவித்த கொல்கத்தா

webteam

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 232 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். 

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்ட தொடங்கினர். முதல் ஐந்து ஓவரில் கொல்கத்தா அணி 39 ரன்கள் சேர்த்தது. 6வது ஓவரின் இரண்டாவது பந்தில் லின் கொடுத்த கேட்சை தவறவிட்டார் பொல்லார்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட லின் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். இவர் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவியுடன் அரைசதம் கடந்தார். ராகுல் சாஹர் பந்துவீச்சில் லின் (54) ரன்களில் வெளியேறினார். 

இதனையடுத்து அதிரடி வீரர் ரஸல் தனது ஆட்டத்தை தொடங்க ஆரம்பித்தார். இவரும் கில்லும் மும்பை அணியை பந்துவீச்சை பதம் பார்த்தனர். குறிப்பாக ராகுல் சாஹர் வீசிய 14வது ஓவரில் ரஸல் மூன்று சிக்சர்கள் விளாசினார். இதற்கு அடுத்த ஓவரை மலிங்கா வீசினார். அந்த ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரிகளையும், ரஸல் ஒரு பவுண்டரியையும் அடித்தனர். சுப்மன் கில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 45 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

எனினும் ரஸல் தனது சிக்சர் மழையை நிறுத்தாமல் பொழிந்தார். 18வது ஓவரில் ரஸல் 3 சிக்சர்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்தது. அதேபோல மலிங்கா வீசிய கடைசி ஓவரில் ரஸல் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. ரஸல் 8 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகள் விளாசி 40 பந்துகளுக்கு 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் சாஹர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.