விளையாட்டு

தவான், ஸ்ரேயாஸ் அரை சதம் - டெல்லி 187 ரன்கள் குவிப்பு

தவான், ஸ்ரேயாஸ் அரை சதம் - டெல்லி 187 ரன்கள் குவிப்பு

webteam

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 187 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோது வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் இல்லை. அவருக்குப் பதில் சந்தீப் லமிசானே சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியில் மோயின் அலி, டிம் சவுதி ஆகியோர் விளையாடவில்லை.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா களமிறங்கினர். பிருத்வி ஷா 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தவானுடன் ஜோடி சேர்ந்து பெங்களூர் பந்துவீச்சை நொறுக்கினார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரிஷப் பந்த் வெறும் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். எனினும் ஸ்ரேயஸ் ஐயர் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உடன் 37 பந்துகளில் 52 ரன் எடுத்து சுந்தரின் சுழலில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி 15 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனாலும் அடுத்த ஐந்து ஓவர்களில் டெல்லி அணி 60 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக 19வது ஓவரில் டெல்லி அணி 16 ரன்கள் எடுத்தது. அதேபோல கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்து 20 ரன்கள் எடுத்தது. இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் ரூதர்ஃபோர்ட் (28) ரன்களுடனும், அக்சர் பட்டேல் (16) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் அணியில் சஹால் 2 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ், சுந்தர், சாய்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.