விளையாட்டு

ரெய்னா, ஜடேஜா அதிரடியால் சென்னை அணி வெற்றி

ரெய்னா, ஜடேஜா அதிரடியால் சென்னை அணி வெற்றி

webteam

கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரைன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே லின் அதிரடி காட்டினார். பவுண்டரிகளாக விளாசினார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக லின் 82 ரன்கள் குவித்தார். சென்னையில் இம்ரான் தாஹிர் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், தாக்கூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஷேன் வாட்சன் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும் டு பிளசிஸ் மற்றும் சுரேஸ் ரெய்னா ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். டு பிளசிஸ் 16 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து நரேன் சுழலில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த ராயுடு வெறும் 5 ரன்னில் வெளியேறினார்.

இருப்பினும் சுரேஷ் ரெய்னா தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் பத்து ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்தது. கேதார் ஜாதவ் ஓரளவு கைகொடுத்தார். அவர் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து சாவ்லா சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் தோனி ரெய்னாவுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டார். அவரும் 16 ரன்கள் எடுத்திருந்த போது நரேனின் பந்துவீச்சில் அவுட் ஆகினார். இதனால் சென்னை அணி 15.4 ஒவர்களில் 121 ரன்கள் சேர்த்தது. வெற்றி பெற இன்னும் 41 ரன்கள் தேவைப்பட்டன. இதனால் சென்னை அணியின் வெற்றி பெறுமா என கேள்வி எழுந்தது. 

அப்போது ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் ஜடேஜா கொல்கத்தா அணியின் பந்துவீச்சை அடித்து ஆட தொடங்கினர். குறிப்பாக 19ஆவது ஓவரில் ஜடேஜா 3 பவுண்டரிகள் விளாசினார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஒவரின் முதல் பந்தில் மீண்டும் ஜடேஜா பவுண்டரி அடிக்க சென்னை அணியின் வெற்றி உறுதியானது.

இறுதியில் சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவும் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 7 ல் வெற்றிப்பெற்றுள்ளது.