விளையாட்டு

ஃபைனலில் சிஎஸ்கே-வுடன் மோதப் போவது யார்? ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!

ஃபைனலில் சிஎஸ்கே-வுடன் மோதப் போவது யார்? ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!

webteam

ஐபிஎல் பைனலில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்ளும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் போட்டி இன்று நடக்கிறது. 

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கடைசிக் கட்டத்துக்கு வந்து விட்டது. நடந்து முடிந்த 56 லீக் போட்டிகளை அடுத்து பிளேஆப் சுற்றுகள் நடந்து வருகின்றன. இந்தச் சுற்றின் கடைசிப் போட்டி இன்று நடக்கிறது. 

முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் அணியை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அந்தப் போட்டியில் தோற்ற ஐதராபாத் அணியும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணியும் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் இன்று மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பந்துவீச்சில் பலமான ஐதராபாத், பேட்டிங் பலத்தைக் கொண்ட கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.

இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள கொல்கத்தா அணி, தொடர்ந்து 4 வெற்றிகள் பெற்ற நம்பிக்கையுடன் ஐதராபாத்தை சந்திக்கிறது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரேன், கிறிஸ் லின் மிடில் ஆர்டரில் கேப்டன் தினேஷ் கார்த்திக்,  ரஸல் ஆகியோர் கலக்கி வருகிறார்கள். சுழலில் நரேன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவும்  மிரட்டுகிறார்கள். அதோடு அந்த அணி உள்ளூரில் ஆடுவது அவர்களுக்கு பலம். 

புள்ளிப் பட்டியலில் டாப் லிஸ்டில் இருந்த ஐதராபாத் அணி, கடைசியாக ஆடிய 4 போட்டிகளில் தோல்வியைதான் பெற்றிருக்கிறது. இதனால் இன்றைய போட்டியில் அதிக பொறுப்புடன் களமிறங்கும். அந்த அணியின் கேப்டன் வில்லியன்சன் செம ஃபார்மில் இருக்கிறார். தவான் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார். இவர்களின் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் ஐதராபாத் தடுமாறிவிடுகிறது. அதிக விலைக்கு வாங்கப்பட்ட மனீஷ் பாண்டே இந்தத் தொடரில் மிரட்டும்படி ஆடவில்லை. 

பந்துவீச்சில் சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, புவனேஷ்வர்குமார் சிறப்பாக வீசுகிறார்கள். சுழலில் ரஷித்கான் மிரட்டுகிறார். ரன்களை குறைவாக விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராக இருக்கிறார் ரஷித். ஐதராபாத் இவரை அதிகம் நம்பி இருக்கிறது. 

இரண்டு அணிகளும் இதுவரை நடந்த லீக் போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.

போட்டி இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.