விளையாட்டு

ஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி!

webteam

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் தொடங்கும் முன்பே, வீரர்கள் அணி மாறும் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஃபார்மில் இல்லாத வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி, பிறகு தங்கள் சொந்த நாட்டு அணியில் இடம்பிடித்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளது. அடுத்த வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி கோவாவில் நடக்கும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்பே வீரர்களை பிடிக்கும் வேலைகளை அணிகள் தொடங்கிவிட்டன. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். ஏலத்தில் அவரை ரூ.2.8 கோடிக்கு அந்த அணி வாங்கியிருந்தது. பெங்களூரு அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஐபில் சராசரி 124.07. இந்நிலையில், ஏலத்தில் வாங்கிய அதே தொகைக்கு அவரை மும்பைக்கு அணிக்கு விற்றுள்ளது பெங்களூரு.

 மும்பை அணியில் ஏற்கனவே இஷான் கிஷான், ஆதித்யா தாரே ஆகிய விக்கெட் கீப்பர் உள்ள நிலையில் மூன்றாவதாக டி காக் சேர்ந்துள்ளார். இவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க மும்பை முடிவு செய்துள்ளது.

டி காக், மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த அணியில் இருக்கும் பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் (ரூ.2.2 கோடி), இலங்கை சுழல் பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா (ரூ.50 லட்சம்) விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஷிகர் தவானை தங்கள் அணிக்கு இழுக்கிறது. அவர் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ளார். ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார். அவருடன் தவானை களமிறக்க அந்த அணி முடிவு செய்துள்ளது. இதற்காக தவானுக்கு ஐதராபாத் அணி கொடுத்துள்ள தொகையை விட இரண்டு மடங்கு தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

தவானுக்குப் பதிலாக அந்த அணியின் கருண் நாயரை, ஐதராபாத் அணிக்கு மாற்ற பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது. ஐபிஎல் ஏலம் தொடங்கும் முன்பே வீரர்கள் மாற்றங்கள் இப்போதே தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.