இந்திய விக்கெட் கீப்பர் தோனியிடம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக, இங்கிலாந்து அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் சாம் பில்லிங்ஸ். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 போட்டி விக்கெட் கீப்பரான இவர், விக்கெட் கீப்பிங்கில் சிறந்த வீரர் என பாராட்டப்படுபவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பது பற்றி அவர் கூறும்போது, ‘சிஎஸ்கே-வுக்காக ஆடும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சிறந்த அணியில் விளையாட இருப்பதால் உற்சாகமாக இருக்கிறேன். நான் மதிக்கும் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. அவர் தலைமையின் கீழ் விளையாடவும் கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன். எந்த ஒரு போட்டியிலும் களத்தில் இறங்கும் எந்த வீரருக்கும் அழுத்தம் இருக்கத்தான் செய்யும். எனக்கும் அப்படித்தான். இந்த மாதிரியான போட்டிகளில், உலகின் தலை சிறந்த வீரர்களுடன் விளையாடுவது புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.