விளையாட்டு

உலக சாதனைகளை அடுக்கிய சர்வதேச தடகள விளையாட்டின் ஜாம்பவான் வீராங்கனை

உலக சாதனைகளை அடுக்கிய சர்வதேச தடகள விளையாட்டின் ஜாம்பவான் வீராங்கனை

JustinDurai
ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் சாதனை புரிந்த ஜாம்பவான் வீராங்கனை ப்ளோரன்ஸ் க்ரிபித் ஜாய்னர் குறித்து சுவராஸ்ய தகவல்கள் இங்கே..
ப்ளோ ஜோ. 80-களில் சர்வதேச தடகள ரசிகர்களின் நட்சத்திர நாயகியாக ஜொலித்தவர். சாதனைகளை அடுக்கும் பேராற்றல், வெற்றிக்கு பின்னான அவரது தனித்துவமான உடல்மொழி என களத்தை அலங்கரித்தவர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் படைத்த உலக சாதனையை 33 ஆண்டுகாலமாக தக்க வைத்திருப்பவர்.
1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஃப்ளோ ஜோ தகுதி பெற்றார். மாஸ்கோவில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக் போட்டியை பனிப்போர் காரணமாக அமெரிக்கா புறக்கணித்ததால், அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. நான்காண்டுகள் காத்திருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார். 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
1988-ஆம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில்,100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய இலக்கை 10.49 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார் அவர். சியோல் ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் தொடரோட்டம் ஆகியவற்றில் பதக்கங்களை வென்று அசத்தினார் ப்ளோ-ஜோ. 200 மீட்டர் ஓட்டத்திலும் அவர் தான் உலக சாதனைக்கு சொந்தக்காரி. பந்தய இலக்கை 21.34 நொடிகளில் எட்டி சாதித்திருக்கிறார் அவர்.
1998-ஆம் ஆண்டு அந்த அதிர்ச்சியான செய்தியை உலகம் கேட்டது. 38 ஆவது வயதில் எதிர்பாரா விதமாக மர்ம மரணம் அடைந்தார் ப்ளோரன்ஸ் க்ரிபித் ஜாய்னர். கலிஃபோர்னியாவில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது உயிர் பிரிந்தது. நரம்பு தளர்வு உள்ளிட்ட சில உடல் பாதிப்புகள் அவரது மரணத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. காலங்கள் பல கடந்தாலும், ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ப்ளோ ஜோவின் பெயர் நினைவுகூரப்படுகிறது. காரணம் அவரது சாதனைகள் அவ்வளவு கனமானது.