காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் இருந்து, தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா விலகியுள்ளார்.
மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து, அந்நாட்டு ஏ அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. வரும் 11 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியில், பிருத்வி ஷா, ரிஷாப் பன்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
உலகக் கோப்பையில் விளையாடும் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக, ரிஷாப் பன்ட்டும் விஜய் சங்கர் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்குப் பதிலாக இந்திய ஏ அணியில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் அடைந்துள்ளதால் அவர் விலகியுள்ளார். அவருக்கு என்ன காயம் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, மகாராஷ்ட் ராவைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளார்.
(மணீஷ் பாண்டே)
15 பேர் கொண்ட இந்திய ஏ அணி விவரம்:
மணீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அன்மோல் பிரீத் சிங், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, இஷான் கிஷான், ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குணால் பாண்ட்யா, தீபக் சாஹர், கலீல் அகமது, அவேஸ்கான், நவ்தீப் சைனி