இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால், அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமையும்.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ஹோப் மற்றும் ஹெட்மயர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், சஹால் வீசிய பந்தில் ஹோப் 24 (22) மற்றும் ஹெட்மயர் 26 (21) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ராம்டின் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேரென் பிரவோ மற்றும் நிகோலஸ் பூரான் ஆகியோர் அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் பிரவோ 43 (37) மற்றும் பூரான் 53 (25) ரன்கள் குவித்தனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்துள்ளது. தற்போது 182 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.