இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து ரோஹித் சர்மா உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்தார். இதையடுத்து 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 12 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் ரோஹித் விலாசிவிட்டுச் சென்றார். அவருடன் இணையாக விளையாடி லோகேஷ் ராகுல் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 260 ரன்கள் குவித்தது.