விளையாட்டு

11 பேர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..

11 பேர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..

webteam

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியின் இந்திய வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், ஃபீல்டிங்கில் அபார திறமையும் கொண்டவர் ரெய்னா. இவருக்கென கிரிக்கெட்டில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழகத்திலும் ரெய்னாவிற்கு பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக ரெய்னா வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தினால் சேர்ந்த கூட்டம் அது. ஒருமுறை பஞ்சாப்பிற்கு எதிராக அதிரடியை வெளிப்படுத்தி ரன் அவுட் ஆன ரெய்னாவுக்கு அரங்கம் அதிர கரகோஷங்கள் எழுந்ததை இதுவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படி முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வந்த ரெய்னா கடந்த ஆண்டு நடத்தப்பட்ட யோ-யோ உடற்தகுதி தேர்ச்சியில் தோல்வியடைந்தார். இதனால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு பறிபோனது. இதைத்தொடர்ந்து பலமுறை அணியில் இடம்பெற முயன்றும், அவரால் முடியவில்லை. இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட யோ-யோ தேர்ச்சியில் உடற்தகுதியால் அவர் வென்றார். இதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சி கொஞ்சம் அல்ல. இந்நிலையில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் அவர் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் 11 பேரில் ஒருவராக விளையாடுவாரா? என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டி தொடர்பாக பேசியிருந்த ரெய்னா, “திறமையை வெளிப்படுத்தியும் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது என்னை காயப்படுத்தியது. எனக்கு 31 வயதாகிறது. வயதை பெரிய விஷயமாக நான் கருதவில்லை. இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவதே இலக்கு” என்று கூறியிருந்தார்.