விளையாட்டு

இந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு

webteam

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 521 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து விளையாடி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 18ஆம் தேதி, நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி,  10 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தன. இந்திய அணியில் விராட் கோலி 97 (152), ரஹானே 81 (131), தவான் 35 (65) ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 161 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. 

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியில் விராட் கோலி 103 (197) ரன்கள் அடித்தார். இந்நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தபோது இந்திய அணி டிக்ளர் செய்தது. ஏற்கனவே இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 168 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனால் தற்போது இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்காக மாறியுள்ளது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.