பெங்களூருவில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 335 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால் மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் கைப்பற்ற வேண்டிய அவசியத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அதேபோல் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடர் வெற்றி என்ற புதிய சாதனை படைக்க கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே வார்னர் அதிரடியாக விளையாடினார். பிஞ்ச் வார்னருக்கு ஒத்துழைப்பு அளித்து விளையாடினார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
அதிரடியாக விளையாடி சதம் விளாசிய வார்னர் 119 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வார்னருக்கு இது நூறாவது போட்டி. தனது நூறாவது போட்டியில் அவர் சதம் அடித்துள்ளார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-பிஞ்ச் ஜோடி 35 ஓவர்களில் 231 ரன்கள் சேர்ந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 350 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வார்னரை தொடர்ந்து பிஞ்ச் 94 ரன்களில் உடனடியாக ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஹேண்ட்கோப் இறுதியில் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 335 ரன்கள் என்ற வெற்றி இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.