விளையாட்டு

2வது டி20 போட்டியிலும் மழைதான் வில்லன்? - உறுமும் ஆஸ்திரேலிய மேகங்கள்

2வது டி20 போட்டியிலும் மழைதான் வில்லன்? - உறுமும் ஆஸ்திரேலிய மேகங்கள்

webteam

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியை போலவே இரண்டாவது டி20 போட்டியிலும் மழை குறுக்கிடலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சிறந்த பந்துவீச்சு மற்றும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதிலும் தோற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது மழைதான். 

ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும், பின்னர் நிலைத்து விளையாடிய 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 17 ஓவர்களிலேயே மழையின் காரணமாக ஆஸ்திரேலியாவின் பேட்டிங்க் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 17 ஓவர்களில் இலக்கு 174 ரன்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. 

மழையால் ஈரப்பதத்துடன் இருக்கு மைதானத்தில் 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுப்பது சுலபமான விஷயம் அல்ல. இருப்பினும் இந்திய அணி ஆரம்பம் முதலே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தது. தவானின் அதிரடியால் இலக்கு எளிதானது. ஒரு கட்டத்தில் தவான் வெளியேற, 4 விக்கெட்டுகளுக்குப்பிறகு ஜோடி சேர்ந்த பண்ட் மற்றும் கார்த்திக் பேட்டால் பந்துகளை விளாசினர். ஆட்டத்தில் இந்தியா நிச்சயம் வெற்றி பெரும் என்பதுபோல் தோன்றியபோது, அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகளால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு காரணம் ஈரப்பதமான பிட்ச்சில் பந்தில் போக்கு மாறியது என கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்பட்டது. 

இந்நிலையில் நாளை 2வது டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் அங்கிருக்கும் வானிலையோ மழை எப்போது வேண்டுமென்றாலும் வரலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் நாளை போட்டியின் போதும் மழை குறுக்கிடலாம் என்றும், அது ஆட்டத்தின் போக்கை மாற்றலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஆட்டத்தின் போக்கு மாறினால் அது யாருக்கும் சாதகம் ? யாருக்கும் பாதகம் ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிப்பதால், நாளை போட்டியில் இந்தியா தோற்றால் கோப்பையை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.