விளையாட்டு

இன்று 2வது டி20 : வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்தியா

இன்று 2வது டி20 : வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்தியா

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் தோல்வியடைந்தால் கோப்பையை இழக்கும் நிலையில் இந்தியா உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

பின்னர் இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் கோப்பை அவர்கள் வசம் செல்லும். இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த போட்டி இறுதிப்போட்டியாக மாறும். எனவே இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்துவதால், மைதானத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முதல் போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.