ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அதிரடி காட்ட, மற்றொரு வீரரான ஷிகர் தாவன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 (24) ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுக்க, 47 (26) ரன்களில் ராகுல் வெளியேறினார். இதன்பின்னர் வந்த கோலி அதிரடி காட்ட, ஒரு ரன் மட்டுமே எடுத்து ரிஷாப் பண்ட் ஏமாற்றம் அளித்துச் சென்றார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கோலி-தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் விராட் கோலி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தினார். அத்துடன் 29 பந்துகளில் அரை சதமும் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய தோனியும் அதிரடியாக விளையாடி, 40 (22) ரன்களில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காத கோலி 72 (38) ரன்கள் விளாசினார். இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யவுள்ளது.