விளையாட்டு

இந்திய அணி அதிரடி ஆட்டம்: நியூசிலாந்துக்கு 203 ரன்கள் இலக்கு

rajakannan

டெல்லியில் நடைபெற்று வரும் முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தவான் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்தாலும், ரோகித் சர்மா மிகவும் பொறுமையாக விளையாடி ரசிகர்களை சோதித்தார். 

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்னர், ரோகித் சர்மா, தவான் இருவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அடுத்த 6 ஓவர்களில் இந்திய அணி 78 ரன்கள் எடுத்தது. 16.2 ஓவர்களில் இந்திய அணி 158 ரன்கள் எடுத்திருந்த போது, தவான் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உட்பட 80 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 55 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். 

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் கோலி 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 3 சிக்ஸர்கள் விளாசினார். தோனியும் இரண்டு பந்துகள் சந்தித்து ஒரு சிக்ஸருடன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சோதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணி 203 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.