மைதானம், சந்திரபாபு எக்ஸ் தளம்
விளையாட்டு

'ரூ.800 கோடி செலவில்' | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்.. அமராவதியில் அமைக்க அரசு முடிவு!

அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாக அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Prakash J

குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்திருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய மைதானமாகக் கருதப்படுகிறது. இங்கு, ஒரேநேரத்தில் 1,32,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியைக் காணும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அதைவிட நாட்டில் பெரிய மைதானம் உருவாக்கப்பட இருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில்தான் இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட இருப்பதாக அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக, ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ஏசிஏ) அமராவதியில் சுமார் ரூ.800 கோடி செலவில் மைதானம் அமைக்கும் திட்டத்தை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவின் தற்போதைய முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். அவர், மாநில தலைநகராக அமராவதியை உருவாக்குவதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறார். அங்குப் பல திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

மைதானம்

அந்த வகையில், இந்நகரில் மிகப்பெரிய மைதானத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2029ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளை அமராவதியில் நடத்தும் முயற்சிகளில் ஆந்திர அரசு களம் இறங்கியுள்ளது. இதற்காக, 60 ஏக்கர் நிலத்தை ஒதுக்க மாநில அரசிடம் வாரியம் கோரியுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் (பிசிசிஐ) ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மைதானத்தின் கட்டுமானத்திற்காக பிசிசிஐ மற்றும் உள்நாட்டில் நிதி திரட்டப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மைதானம் நாட்டின் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மறுவரையறை செய்வது மட்டுமின்றி, அமராவதிக்குச் சர்வதேச அளவில் விளையாட்டு துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தரும். வட கடலோர ஆந்திரா, விஜயவாடா மற்றும் ராயலசீமா உள்ளிட்ட மூன்று இடங்களில் மூன்று தனித்தனி கிரிக்கெட் அகாடமிகள் நிறுவப்படும்.

மேலும், ஐபிஎல் போட்டிகளை நடத்தும் வகையில் விசாகப்பட்டினம் மைதானத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் தங்கும் வகையில் ஒரு மைதானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.