விளையாட்டு

இங்கி. மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

இங்கி. மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

webteam

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதலாவது போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மும்பையில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் வீராங்கனைகள், இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தனர்.

அந்த அணியில் அதிகப்பட்சமாக நடாலி சிவெர் (Natalie Sciver) 85 ரன் எடுத்தார். லாரன் வின்ஃபீல்ட் 28 ரன்னும் டேமி பியாமோன்ட் 20 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணை தாண்டவில்லை. இதனால் அந்த அணி, 43.3 ஓவரில் 161 ரன்னுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. இந்திய தரப்பில் அனுபவ வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி ஆட்டத்தை தொடங்கியது. ஜெமிமா ரோட்ரிகுயஸும் மந்தனாவும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரின் 5 வது பந்தில் ரோட்ரிகுயஸ் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனையடுத்து மந்தனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மந்தனா 74 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் பொறுப்புடன் ஆடி ஆட்டமிலக்காமல் 47 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துசென்றார். இறுதியில் இந்திய மகளிர் அணி 41.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜுலன் கோஸ்வாமி ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. இந்த இரண்டு அணிகளிடையேயான கடைசி மற்றும் மூன்றாவது போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.