நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் சுற்றுப் போட்டியில் விளையாடி வருகின்றன. நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ஓப்பனர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் யாஸ்திகா பாட்யா களம் இறங்கினர்.
யாஸ்திகா அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கினார். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து கேப்டன் மிதாலி மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் கிரீஸுக்கு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பின்னர் ஹர்மன்ப்ரீத் களத்திற்கு வந்தார். அப்போது இந்தியா 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆட்டத்தை மாற்றிய கூட்டணி!
நெருக்கடியான நிலையில் ஸ்மிருதி மற்றும் ஹர்மன்ப்ரீத் இணையர் ஆட்டத்தை இந்தியா பக்கமாக மாற்றும் முயற்சியை முன்னெடுத்தனர். அதற்கான பலனும் கிடைத்தது. இருவரும் 184 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்மிருதி 123 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை எடுத்திருந்தது. ஹர்மன்ப்ரீத் 107 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து 49-வது ஓவரில் அவுட்டானார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள நான்காவது சதம் இது. அதோடு உலகக் கோப்பை அரங்கில் இது அவருக்கு இரண்டாவது சதம் ஆகும்.