விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

EllusamyKarthik

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நாளை (10.03.2022) நியூசிலாந்து அணியுடன் முதல் சுற்றுப்போட்டியில் பலப்பரீட்சை செய்கிறது. இந்த தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளும் உலகக் கோப்பையில் 12 முறை விளையாடியுள்ளன. அதில் இந்தியா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு அறிவிக்கப்படவில்லை. நாளை ஹாமில்டனில் இரு அணிகளும் விளையாடுகின்றன. இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் விக்கெட் வீழ்த்தியவர்களில் ஜூலான் கோஸ்வாமியும் உள்ளனர். 

இந்திய அணி முதல் போட்டியில் பெற்ற வெற்றியை இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதே நேரத்தில் அந்த தொடரை இந்தியா 1 - 4 என்ற கணக்கில் இழந்திருந்தது. 

நியூசிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது. நாளை காலை 6.30 மணியளவில் இந்த போட்டி தொடங்க உள்ளது.