அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து என 77 நாட்கள் நடைபெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி வீரர்கள்
சென்றுள்ளனர்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதலில் அயர்லாந்துடன் 2
டி20 போட்டிகளில் விளையாட, இந்திய அணி அயர்லாந்து சென்றுள்ளது. இதற்காக இந்திய அணி நேற்று அயர்லாந்து புறப்பட்டுச்
சென்றது. அயர்லாந்து அணியிடம் வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 டி20 போட்டிகள் விளையாடும் இந்திய அணி,
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இங்கிலாந்துடன் உடனான தொடரில் 3 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா
விளையாடுகிறது. ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த
சுற்றுப்பயணம் மொத்தம் 77 நாட்கள் ஆகும். இத்தனை நாட்கள் விளையாடும் இந்திய வீரர்கள் எந்த அளவிற்கு உடல் தகுதி
கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு தோன்றும். ஒருவேளை இதற்குத்தான் யோ-யோ போன்ற
உடற்தகுதி தேர்வுகள் கடினமாக நடத்தப்படுகின்றனவா? என்றும் தோன்றுகிறது.
இதற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர் என்ற புகைப்படங்களை பிபிசிஐ தனது
அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் வியர்த்து விறுவிறுக்க உடற்பயிற்சி மேற்கொள்ளும் விராட் கோலி தனது
கையில் உள்ள ஒரு எனர்ஜி ட்ரிங்ஸை காட்டுகிறார். மற்றொரு புறம் தினேஷ் கார்த்தி கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார். இந்த
பயிற்சியின் போது கிரிக்கெட் வீரர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்துக்கொண்டும், கிண்டல் அடித்துக்கொண்டும் இருப்பார்களாம்.
இதனால் உடற்பயிற்சி என்பதை அவர்கள் சிரமமாக எண்ணாமல் அதையும் விரும்பி மேற்கொள்கின்றதாக கூறப்படுகிறது. இந்த கடின
உழைப்பே இந்திய வீரர்களுடைய வெற்றியின் ரகசியம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர். விடாமுயற்சியும், கூட்டுப்பயிற்சியும் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் அடுத்தடுத்த தொடர்களை வெல்லவும் ஆயத்தம் ஆகிவருகின்றனர்.