ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியில் 38 வயதான இந்திய ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தார்.
இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளராக தன்னை மாற்றிக்கொண்ட அஸ்வின், இந்தியாவிற்காக மொத்தமாக 765 விக்கெட்டுகளையும், 537 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் அதிவேகமாக 350 விக்கெட்டுகள் மற்றும் அதிகமுறை (11) தொடர் நாயகன் வென்ற வீரராக வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
இந்தியாவை 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பதக்கத்திற்கு அழைத்துச்சென்ற ஹாக்கி ஜாம்பவான் ஸ்ரீஜேஷ், தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றதற்குபிறகு தனது ஓய்வை அறிவித்தார்.
ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 31 வயதான தீபா கர்மாகர், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்ட் ஆவார்.
2024 ஆசிய பெண்கள் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் வால்ட் பிரிவில் தங்கம் வென்ற தீபா, கான்டினென்டல் மீட்ஸில் டாப் போடியத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் துருக்கியில் நடந்த 2018 ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் பெண்கள் வால்ட் போடியத்தில் முதலிடம் பிடித்த பிறகு, சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் தீபா பெற்றார். அதே ஆண்டில், ஜெர்மனியின் காட்பஸில் நடந்த உலகக் கோப்பையில் தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு உயிரூட்டிய இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது, அர்ஜுனா விருது, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது போன்றவற்றை வழங்கி கௌரவித்துள்ளது. தொடர் காயங்களால் தன்னுடைய ஓய்வை நடப்பாண்டு அறிவித்தார் ஜாம்பவான் தீபா கர்மாகர்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானின் நம்பர் 1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிவரை வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் மல்யுத்த விதிமுறையின் படி கடைசிநேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சர்ச்சைக்குரிய நிகழ்விற்கு பிறகு மல்யுத்தத்திலிருந்து ஓய்வை அறிவித்த அவர், அரசியலில் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 2022 முதல் இந்தியா கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை, 2024-ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், ஐபிஎல்தொடர் நடந்து முடிந்ததும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு ஓய்வை அறிவித்தார். தற்போது ஆர்சிபி அணிக்காக பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2007 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அபாரமான ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங், வங்கதேச அணிக்கு எதிரான நிதாஷ் டிரோபி பைனலில் அவருடைய ஆட்டம் எப்போதும் ரசிகர்களால் நினைவுகூறப்படும்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் 94 கோல்கள் அடித்திருக்கும் இந்தியாவின் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, கிறிஸ்டினோ ரொனால்டோ (135 கோல்கள்), லியோனல் மெஸ்ஸி (112 கோல்கள்), அலி டேய் (108 கோல்கள்) முதலிய வீரர்களுக்கு பிறகு 4வது வீரராக நீடிக்கிறார்.
இந்தியாவின் கால்பந்து விளையாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிய காரணியாக இருந்த கேப்டன் சுனில் சேத்ரி, நடப்பாண்டு குவைத்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.