இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் இழந்த இந்திய அணி, இப்போது ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 269 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் 120 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டும், சேஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி வெற்றி பெற்றது. விராத் கோலி அபாரமாக ஆடி, 112 ரன்கள் எடுத்தார்.
தோல்விக்குப் பின் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் கூறும்போது, ‘இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்கள் ரன் வேகத்தை கட்டுப்படுத்திவிட்டார்கள். சில தென்னாப்பிரிக்க வீரர்கள் அவர்கள் (குல்தீப், சேஹல்) பந்துகளை எதிர்கொண்டதில்லை.
சிலர் ஐபிஎல் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். அதனால் அவர்களை சமாளிக்க இன்னும் இரண்டு போட்டிகள் தேவைப்படும். இந்த மைதானத்தில் 269 ரன்கள் என்பது குறைவு. 300 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். இதற்கு முன் இங்கு ஆடிய இரண்டு போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து வெற்றி பெற்றிருக்கிறோம். இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 370 ரன்களை சேஸ் செய்திருக்கிறோம். அதனால் இந்தப் போட்டியில் நாங்கள் அதிக ரன் குவிக்காததுதான் தோல்விக்கு காரணம். அதே நேரம் எங்கள் பந்துவீச்சாளர்களும் சரியாக வீசவில்லை. நாங்கள் அதிக ரன்கள் குவித்திருந்தால் எதிரணிக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்த அழுத்தத்தை நாங்கள் கொடுக்க தவறிவிட்டோம்’ என்றார்.