இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 407 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீசியபோது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் பணியை கவனித்த முகமது சிராஜ் மற்றும் பும்ராவை மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர் இனவெறி ரீதியாக சீண்டியுள்ளனர்.
அது தொடர்பாக கேப்டன் ரஹானே கள நடுவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் அதனால் ஆட்டமும் சில நிமிடங்கள் தாமதமானது. அதே நேரத்தில் அந்த பார்வையாளர்கள் மைதானத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு திரும்பியுள்ள கோலி “இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுண்டரி லைன்களில் இதுபோன்ற பலவித தாக்குதல்கள் நடக்கின்றன. இது ரவுடித்தனத்தின் உச்சம். களத்தில் இதுபோல நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.