விளையாட்டு

டி20, ஒரு நாள் போட்டி ஓவர்... அடுத்து டெஸ்ட்! - கேப்டன் ரோகித்தின் வெற்றி நடை

EllusamyKarthik

ஹிட்-மேன் என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா. எதிரணியின் பந்துவீச்சை பொளந்து கட்டும் பேட்ஸ்மேன் அவர். டி20, ஒருநாள் என ஷார்டர் பார்மெட்டில் அணியை வழிநடத்தி வந்த ரோகித், இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்த உள்ளார். இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் 35-வது கேப்டன். கேப்டனாக அவரது முதல் போட்டியே அணியின் முன்னாள் கேப்டனான கோலியின் நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. 

இருவரும் இணைந்து நாட்டுக்காக “நாட்டு நாட்டு நாட்டு…” என RRR படத்தில் வெறித்தனமாக நடனமாடும் கதாநாயகர்கள் போல கதகளி ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோகித் - டெஸ்ட் கிரிக்கெட்

கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு வருவதும், போவதுமாகவே இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தான் அவருக்கு அணியில் ரெகுலராக இடம் கிடைத்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது அவர் அணியின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஓப்பனர். முற்றிலும் இளமையான அணியை கேப்டனாக தனது முதல் டெஸ்ட் தொடரில் ரோகித் வழிநடத்த உள்ளார். 

சீனியர் வீரர்களான ரகானே, புஜாரா, சாஹா மாதிரியான வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் அடுத்த தலைமுறைக்கான அணியை உருவாக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் ரோகித் போன்றதொரு கேப்டன் அணியை வழிநடத்துவதை பலரும் வரவேற்றுள்ளனர். அணியை மட்டுமல்லாது அடுத்த கேப்டனையும் அடையாளம் காண வேண்டிய பொறுப்பும் ரோகித் வசம் இப்போது உள்ளது. அவர் நிச்சயம் வலுவான அணியை கட்டமைப்பார் என எதிர்பார்ப்போம். 

ரோகித் என்ன சொல்கிறார்?

“கோலி விட்டுச் சென்ற பணியைதான் நான் தொடர உள்ளேன். அது தான் நிஜம். டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அணியை கட்டமைத்தவர் கோலி. அதை நான் மறுக்காமல் சொல்லியாக வேண்டும். இந்திய அணி தற்போது நல்லதொரு நிலையில் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்” என கேப்டனாக தனது முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தெரிவித்துள்ளார் ரோகித். 

இந்தியாவுக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ரோகித். மொத்தம் 3047 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 46.88. 8 சதம் மற்றும் 14 அரைசதங்களும் இதில் அடங்கும்.