விளையாட்டு

டி20 உலகக் கோப்பை ரத்தானால்.. - அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகள் ?

webteam

சர்வதேச டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை ரத்து செய்யப்பட்டால் அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரொனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்று மேலும் பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்திருக்கின்றன. இந்த ஊரடங்கு தினசரி வேலைகள் முதல் திருமணம் வரை அனைத்தையும் பாதித்திருக்கிறது. அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகளையும் இது விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் மார்ச் இறுதியில் தொடங்கியிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அத்துடன் முழுவதும் ரத்தாகப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதற்கு இந்த வருடம் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டிகள் ரத்தாக வேண்டுமாம். அப்படி ரத்து செய்யப்பட்டால் ஐபிஎல் போட்டிகளை அக்டோபரில் நடத்த வாய்ப்புண்டு.

ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அங்கு சர்வதேச எல்லைகள் 6 மாதத்திற்கு மூடப்பட்டுள்ளன. பிரிட்டனிலும் இதே நிலையை கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நிலை என்ன என்பது போக போக தெரியும். ஒருவேளை 6 மாதத்திற்கு பிறகும் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத பட்சத்தில், சர்வதேச பயணங்கள் துண்டிப்பு தொடரலாம்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பை ரத்து செய்யப்படலாம். அப்படி நடந்தால், அதோடு டி20 உலகக் கோப்பை 2020ஆம் ஆண்டில் தான் நடத்தப்படும். ஏனென்றால் அதுவரை ஐசிசி-ன் கால அட்டவணை நிரம்பியுள்ளது. இவ்வாறாக டி20 உலகக் கோப்பை ரத்தாகி, ஆறுமாத சர்வதேச எல்லைகளின் கட்டுப்பாடுகளும் முடிந்தால் அக்டோபர் மாதம் வந்துவிடும். அப்போது ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பிருக்கிறது.

அதேசமயம் ஐசிசி அலுவலர்கள் சிலர் கூறியுள்ள தகவலில், டி20 உலகக் கோப்பையை ரத்து செய்வது தொடர்பாகவோ அல்லது தள்ளிவைப்பது தொடர்பாகவோ எந்த திட்டமும் இல்லை. டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தலைவர் கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது, நடப்பு ஆண்டில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நலமுடன் நடக்கும் என நம்புவதாக கூறியிருக்கிறார்.