இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் முகமது ஷமி தான் வளர்க்கும் நாயுடன் போட்டிப்போட்டு வேகமாக ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இப்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீர்ரகள் பலரும் இந்த பொது முடக்க காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பலரும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வீட்டில் இருந்தபடியே உரையாற்றி வருகின்றனர். பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் வலைப்பயிற்சியை கூட தொடங்கவில்லை. விராட் கோலி போன்றோர் வீட்டு வளாகத்திலியே டைம் பாஸுக்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு வந்து பயிற்சியை மேற்கொள்வதற்கான உத்தரவை பிசிசிஐ இன்னும் பிறப்பிக்கவில்லை.
ஆனாலும் அண்மையில் இஷாந்த் சர்மாவும், முகமது ஷமியும் கிரிக்கெட்டுக்கான உடற்பயற்சிகளை செய்ய தொடங்கியுள்ளனர்.சில நாட்களுக்கு முன்னர் சஷி, தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களாக தான் செய்யும் உடற்பயிற்சி உள்ளிட்டப் பல்வேறு வீடியோக்களை, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் சமி. இந்நிலையில் தன் நாயுடன் அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்றையும் இப்போது பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் நாயைக் கொஞ்சி விளையாடும் ஷமி, ஒரு கட்டத்தில் அதனுடன் வேகமாக ஓட போட்டிப் போடுகிறார். ஓட்டப் பந்தயத்தின் இறுதிவரை சமியே, நாயுக்கு முன்னால் ஓடியபோதும், இறுதியில் நாயும் அவரை எட்டிப் பிடிக்கிறது. அத்துடன் வீடியோவும் முடிகிறது. காணொலியைப் பகிர்ந்த சமி, ‘ஸ்பீடு வொர்க் வித் ஜாக்,' என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.