விளையாட்டு

மும்பை டெஸ்ட்: நீண்ட நாட்களுக்கு பிறகு அசத்தல் ஆட்டம் - சதம் விளாசிய மயங்க் அகர்வால்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், நியூசிலாந்து அணிக்கு எதிரான மும்பை வான்கடே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்துள்ளார். 

இந்த இன்னிங்ஸில் அவர் எதிர்கொண்ட 196-வது பந்தில் பவுண்டரி விளாசி சதம் பதிவு செய்து அசத்தியுள்ளார் மயங்க். மொத்தம் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் இந்த இன்னிங்ஸில் ஸ்கோர் செய்துள்ளார் அவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள நான்காவது சதம் இது.  

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 2010 டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் சதம் பதிவு செய்துள்ளார். அதே போல கடைசியாக கடந்த 2014 ஆக்லாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சதம் பதிவு செய்திருந்தார். 2010-இல் சேவாக் மற்றும் 2014-இல் தவானும் சதம் பதிவு செய்திருந்தனர். 

உள்நாட்டில் இதுவரை மயங்க் விளையாடி உள்ள டெஸ்ட் போட்டிகளில் பதிவு செய்துள்ள ரன்கள் 215, 7, 108, 10, 243, 14, 13, 17, 102* (இந்த போட்டி) இதுவாகும். சுமார் இரண்டு ஆண்டுகள் மற்றும் 18 நாட்களுக்கு பிறகு இந்த சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சதம் பதிவு செய்துள்ள இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் மயங்க். மொத்தம் 4 சதங்கள். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோகித் ஷர்மா 5 சதங்களும், மூன்றாவது இடத்தில் உள்ள ரஹானே 3 சதங்களும் பதிவு செய்துள்ளனர். 

மயங்க், ஷ்ரேயஸ் மற்றும் சாஹா என மூவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், எதிர்வரும் நாட்களில் டெஸ்ட் அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வுக் குழுவினருக்கு குழப்பங்கள் வரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் மாதிரியான பிரதான வீரர்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவர ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வரும் கோலி, புஜாரா மற்றும் ரஹானேவுக்கு சிக்கல் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்திய அணி முதல் நாள் முடிவில் 70 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 120, சாஹா 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக சுப்மன் கில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி, புஜாரா டக் ஆகி இருந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். நான்கு விக்கெட்டையும் நியூசிலாந்து அணியின் அஜஸ் படேல் வீழ்த்தினார்.