சுரேஷ் கல்மாதி, அபய் சவுதாலா ஆகியோரை வாழ்நாள் தலைவர்களாக நியமித்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
சுரேஷ் கல்மாதி, அபய் சவுதாலா ஆகியோர் கவுரவ வாழ்நாள் தலைவர்களாக நியமிக்கப்படுவதாக சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள கல்மாதி மற்றும் சவுதாலாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், வாழ்நாள் தலைவர்கள் தொடர்பான நியமனம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கவுரவத் தலைவர்கள் குறித்து எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.