விளையாட்டு

ஷமிக்கு மென்மையான பாராட்டு... விமர்சனத்திற்கு உள்ளான ரோஹித் ஷர்மா

EllusamyKarthik

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முகமது ஷமியை, இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மென்மையான முறையில் பாராட்டியிருப்பது விமர்சனத்திற்கு வித்திட்டுள்ளது.

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், ரபாடாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 200 விக்கெட்டுகள் என்ற சாதனையை முகமது ஷமி எட்டினார். ஜவகல் ஸ்ரீநாத், கபில்தேவ்க்கு பிறகு விரைவாக இந்த சாதனையை படைத்திருக்கும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரான ஷமிக்கு, இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி கேப்டனான ரோஹித் ஷர்மா மென்மையான முறையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், இருநூறு என்பது ஒரு சிறப்பான எண் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் விளாசியிருக்கும் ரோஹித் ஷர்மா, முகமது ஷமியின் 200 விக்கெட்டுகள் சாதனை வழியே, தனது பெருமையை வெளிப்படையாக குறிப்பிடும் வகையில் வாழ்த்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவில் முகமது ஷமியின் பெயரை குறிப்பிட்டோ அல்லது அவரை பின்னூட்டம் செய்தோ ரோகித் ஷர்மா பதிவிடவில்லை. இதனால் ரோகித்தின் வாழ்த்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். உலகக் கோப்பை இருபது ஓவர் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது, முகமது ஷமி மதரீதியான விமர்சனங்களுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.