ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1 - 1 என்ற சமநிலையில் இந்த தொடர் இப்போது உள்ளது.
இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. இரண்டாவது போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது கால் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் நான்காவது ஓவரை வீசியபோது ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
“நான்காவது ஓவரை வீசியபோது அவருக்கு கால் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவரை பிசிசிஐயின் மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. அவர் ஸ்கேனுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்” என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம்தான் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர் விளையாடாத பட்சத்தில் சைனி அல்லது நடராஜனுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னி மைதானத்தில் நடராஜன் இரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி உள்ளார்.