இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமாகும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இந்த சுற்றுப்பயணத்தின்போது ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் அறிமுகமாகி இருந்தார் நடராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 300 வது வீரர் நடராஜன். சர்வதேச கிரிக்கெட்டில் தனது பந்து வீச்சால் கெத்து காட்டி வருகிறார் அவர். அதன் அடையாளம் தான் அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் நடராஜன் தவிர்க்கப்படாத வீரனாக இருப்பதற்கு காரணம். இதே போட்டியில் மற்றொரு அறிமுக வீரர் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.
காபா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதல் 15 ஓவர்களுக்குள் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்கஸ் ஹாரிஸ் மற்றும் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர் இந்திய பந்து வீச்சாளர்கள். பும்ரா, அஷ்வின், விஹாரி, ஜடேஜாவுக்கு மாற்றாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால் மற்றும் ஷர்துல் தாக்கூர் இந்த போட்டியில் விளையாடுகின்றனர்.