இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுக வீரராக களம் இறங்கி அசத்தியவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். ஐபிஎல் தொடர் முடிந்த கையேடு துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறந்தவர் கிட்டதட்ட ஆறு மாத காலத்திற்கு பிறகு வீடு திரும்ப உள்ளார். இந்த ஆறு மாத காலத்தில் அவரது தந்தையின் இழப்பும் அடங்கும். சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்த போது அவரது தந்தை முகமது கவுஸ் உயிரிழந்தார்.
‘நான் கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என உறுதி ஏற்றுள்ளார் சிராஜ்” என சொல்லி இருந்தார் அவரது சகோதரர் முகமது இஸ்மாயில்.
அப்பாவின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாத சிராஜ் சொன்னதை போலவே இந்தியாவை இந்த தொடரில் வெற்றி பெற செய்துள்ளார். மூன்று ஆட்டங்களில் விளையாடிய சிராஜ் 13 விக்கெட்டுகளை இந்த தொடரில் வீழ்த்தி உள்ளார். பும்ரா காயம் காரணமாக நான்காவது டெஸ்ட்டிலிருந்து விலக அவருக்கு சேர்த்து ஓவர் டைமாக விளையாடிய விக்கெட் வேட்டை நடத்தினார்.
இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் தனது தந்தைக்கு சிறப்பான வகையில் அவர் நினைத்த்துபோல் அஞ்சலி செலுத்தியுள்ளார் சிராஜ். இனவெறி ரீதியாக சீண்டினார்கள், அப்பாவின் பிரிவை எண்ணி மைதானத்திலேயே கண்கலங்கி அழுதார் என பல தடைகளை கடந்து இந்த சபதம் நிறைவேறியுள்ளது.