விளையாட்டு

அறிமுக டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்!

அறிமுக டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை காபா மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு அறிமுக வீரர்களாக வாஷிங்கடன் சுந்தரும், நடராஜனும் விளையாடுகின்றனர். இருவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. 

முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாகவே ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மார்க்கஸ் ஹாரிஸ் விக்கெட்டை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர். தொடர்ந்து ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் பந்து வீசினார். டெஸ்ட் போட்டியில் உலகின் முன்னணி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக வாஷிங்டன் தனது முதல் பந்தை வீசினார். 

உணவு இடைவேளைக்கு பிறகு 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர் ஸ்மித்தும், லபுஷேனும். இந்நிலையில் 35-வது ஓவரின் போது இரண்டாவது ஸ்பெல்லை வீச சுந்தரை அழைத்தார் கேப்டன் ரஹானே. ஸ்லிப், லெக் ஸ்லிப் மற்றும் ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டர்களை செட் செய்து பந்தை டாஸாக வீசினார் சுந்தர். அதை ஃப்ளிக் ஆட முயன்ற ஸ்மித் ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஸ்மித் 77 பந்துகளில் 36 ரன்களை குவித்திருந்தார். 

இந்த விக்கெட்டின் மூலம் தனது முதல் டெஸ்ட் விக்கெட் என்ற முதல்படியை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்து வைத்துள்ளார் வாஷிங்டன். ஸ்மித்தின் விக்கெட் இந்தியாவின் கையை இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த செய்துள்ளது.